பாஜக பிரமுகர் எஸ்வி சேகர் பெண் பத்திரிகையாளரை ஆபாசமாக, தரக்குறைவாக பேசிய வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்தார். இந்நிலையில் தலைமறைவாக இருந்து வந்த அவர் உச்ச நீதிமன்றத்தை நாடி கைதுக்கு தடை உத்தரவு வாங்கியுள்ளார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தின் போது செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது கேள்வியொன்றை எழுப்பிய பெண் பத்திரிகையாளரை அவர் கன்னத்தில் தட்டிவிட்டு பதில் அளிக்காமல் சென்றார். இதனையடுத்து ஆளுநர் தனது அனுமதியில்லாமல் தன்னை தொட்டதாக அந்த பெண் பத்திரிகையாளர் போர்க்கொடி தூக்க விவகாரம் பெரிதானது. இதனையடுத்து ஆளுநர் மன்னிப்பு கோரினார்.

ஆனால் அந்த பெண் பத்திரிகையாளரையும், ஒட்டுமொத்த பெண் பத்திரிகையாளர் மற்றும் ஊடகத்தினரையும் மோசமான வார்த்தைகளால், ஆபாசமாக அர்சித்து பாஜக பிரமுகரும், நடிகருமான எஸ்வி சேகரின் முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியானது.

இதனையடுத்து எஸ்வி சேகருக்கு பலதரப்பில் இருந்து கண்டனங்கள் குவிந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து எஸ்வி சேகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. போலீசார் அவரை கைது செய்ய முயன்று வந்தனர். ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டு உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற முயற்சித்து வந்தார். ஆனால் அவரது மனு தள்ளுபடியானது.

இந்நிலையில் எஸ்வி சேகர் அவதூறாக பேசிய வழக்கில் ஜூலை 5-ஆம் தேதி ஆஜராகுமாறு கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சூழலில் எஸ்வி சேகர் உச்ச நீதிமன்றத்தை நாடியதை அடுத்து அவரை ஜூன் 1-ஆம் தேதி வரை கைது செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக எஸ்வி சேகர் அந்த பதிவை முகநூலில் இருந்து நீக்கிவிட்டு, தனது செயல் தவறுதலாக நடந்தது என்றும், அதற்கு மன்னிப்பும் கேட்டுவிட்டார் அவர்.