நடிகர் கமல்ஹாசன் சமீபகாலமாக அரசியல் பற்றிய தன்னுடைய பார்வையை கருத்துக்களாக வெளியிட்டு வருகிறார். இந்த கருத்துக்கள் அரசியல் கட்சியினருக்கு பெரிய கசப்பு மருந்தாக இருந்து வருகிறது. கமலின் இந்த புதிய நிலைப்பாடு அவர் அரசியலில் களமிறங்க தயாராகிவிட்டார் என்று பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில், சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் நடிகர் எஸ்.வி.சேகர் சந்தித்து, அவருக்கு பொன்னாடி போர்த்தியுள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து எஸ்.வி.சேகர் கூறும்போது, கமலும் நானும் 40 வருடங்களாக நண்பர்களாக இருந்து வருகிறோம். சமீபகாலமாக அவர் பல்வேறு அரசியல் கருத்துக்களை கூறி வரும் நிலையில், அவரிடம் நான் நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும், கட்சி தொடங்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன்.  கமல் நேர்மையானவர், அவர் அரசியலுக்கு வருவது நல்லது.

தமிழ்நாட்டிற்கு நேர்மையான அரசியல் தலைவர்கள் தேவை. மூப்பனார் அரசியல் கட்சி தொடங்கியபோது படித்தவர்கள் ஏராளமானோர் அவருக்கு ஆதரவு கொடுத்தார்கள். அதுபோல் கமலும் கட்சி தொடங்கினால் படித்தவர்கள் ஆதரவு அவருக்கு நிறைய கிடைக்கும். மக்களும் அவருக்கு ஆதரவு கொடுப்பார்கள். எனக்கும் கமலுக்கு ஒத்த கருத்துக்கள் நிறைய உண்டு. எனவே அவர் அரசியலுக்கு வருவதை நான் ஆதரிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.