பெண் பத்திரிக்கையாளரை இழிவாக, அவதூறாக பேசிய வழக்கில் பாஜக பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர் கடந்த இரண்டு மாதமாக தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில் இன்று எழும்பூர் நீதிமன்றத்தின் பின் வாசல் வழியாக ஆஜரானார்.

கடந்த மே மாதம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது பெண் பத்திரிகையாளரின் கண்ணத்தை தடவி விமர்சனத்துக்கு உள்ளானார். இதனையடுத்து தனது செயலுக்கு மன்னிப்பு கேட்ட ஆளுநர் கண்ணத்தை தடவியதற்கான விளக்கத்தையும் அளித்தார்.

இந்த சம்பவம் குறித்து தனது பேஸ்புக்கில் பதிவிட்ட பாஜக பிரமுகர் எஸ்வி சேகர் பெண் பத்திரிக்கையாளர்களை மிகவும் இழிவாக தரம் தாழ்ந்தி விமர்சித்திருந்தார். இதனை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. பத்திரிக்கையாளர்கள் சார்பில் பல்வேறு மாவட்ட காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.

எஸ்வி சேகரை கைது செய்ய தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றத்தை நாடினார் அவர். ஆனால் உச்ச நீதிமன்றமும் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. இதனால் எஸ்வி சேகர் எந்த நேரமும் கைதாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இதனால் தலைமறைவாக இருந்த எஸ்வி சேகர் தமிழக தலைமைச்செயலாளரின் உறவினர் என்பதால் அவரை கைது செய்ய தமிழக காவல்துறை தயக்கம் காட்டி வந்தது. காவல்துறை பாதுகாப்புடனே பல இடங்களுக்கு சென்று வந்தார் எஸ்வி சேகர். இதனை பலரும் சுட்டிக்காட்டியும் காவல்துறை அவரை கைது செய்யாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த வழக்கில் அவர் 20-ஆம் தேதி ஆஜராகுமாறு எழும்பூர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இதனையடுத்து அவர் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். வீட்டிலிருந்தே பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டார் எஸ்வி சேகர். பாதுகாப்பு மற்றும் அச்சம் காரணமாக பின்வாசல் வழியாக நீதிமன்றத்தில் ஆஜரானார்.