52 வயதில் அமீர்கானுக்கு இப்படி ஒரு நோயா?: அதிர்ச்சியில் பாலிவுட்

பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் அமீர்கான் தற்போது ‘சீக்ரெட் சூப்பர் ஸ்டார்’ படத்தின் ரிலீசில் பிசியாக இருக்கிறார். இதற்காக பல புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இப்படத்தை அமீர்கானே தயாரித்துள்ளார். இந்நிலையில், அமீர்கான் ‘பானி’ என்ற பெயரில் நடத்தி வரும் தொண்டு நிறுவனத்தின் பரிசளிப்பு விழாவில் சமீபத்தில் கலந்துகொள்வதாக இருந்தது.

ஆனால், திடீரென அவரது மனைவி கிரண் ராவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே அமீர்கான் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை ரத்து செய்தார். இதையடுத்து டாக்டர்கள் அவரது வீட்டுக்கு பரிசோதனை செய்து பார்த்தனர். இருவருடைய ரத்த மாதிரிகளையும் பரிசோதித்ததில் இருவருக்கும் பன்றிக் காய்ச்சல் இருப்பதற்குண்டான அறிகுறி தெரிய வந்துள்ளது.

இதையடுத்து வீடியோ கான்பரன்சிங் மூலம் ‘பானி’ பரிசளிப்பு விழாவில் பேசிய அமீர்கான் தனக்கு பன்றி காய்ச்சல் நோய் வந்துள்ளதை அனைவர் முன்னிலையிலும் உறுதிப்படுத்தினார். வீட்டிலிருந்தபடியே அவரும், அவரது மனைவியும் சிகிச்சை பெறப்போவதாகவும், இன்னும் ஒருவார காலத்துக்கு எந்த விழாக்களிலும் கலந்துகொள்ள போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

‘பானி’ தொண்டு நிறுவனத்தின் பரிசளிப்பு விழாவில் அமீர்கான் கலந்துகொள்ள முடியாததை அடுத்து அந்த நிகழ்ச்சியில் மற்றொரு பாலிவுட் நடிகரான ஷாருக்கான் கலந்துகொண்டு சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.