முட்டிக் கொள்ளும் திரை உலகினர் – புது படங்கள் வெளியவாதில் சிக்கல்

தமிழ் சினிமாவின் வினியோகஸ்தர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே எழுந்துள்ள பிரச்சனையால் புதிய படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சமீபகாலமாக சிறிய நடிகர் முதல் பெரிய நடிகர் வரை நடித்து வெளியாகும் பெரும்பாலான படங்கள் தோல்வி அடைகின்றன. இதனால், தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், விஷால் தலைமையில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே, இந்த பிரச்சனையை அவர்கள் எப்படி தீர்ப்பார்கள் என தமிழ் சினிமா உலகினர் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருகிறார்கள்.

சமீபத்திய படங்கள் நஷ்டத்தை ஏற்படுத்தி வருவதால், எம்.ஜி (மினிமம் கேரண்டி) முறையில் படங்களை இனி வாங்கி வெளியிடப் போவதில்லை எனவும், அவுட் ரேட் சதவீத அடிப்படையில் மட்டுமே படங்களை வாங்க வினியோகஸ்தர்கள் முடிவெடுத்ததாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. ஒருவேளை, இதை தயாரிப்பாளர்கள் தரப்பு ஏற்காவிடில், மே மாதம் முதல் புதிய படங்களை வாங்கி வெளியிட மாட்டோம் என வினியோகஸ்தர்கள் தரப்பு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

அதேபோல், வினியோகஸ்தர்களின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தயாரிப்பாளர்கள்,மே மாதம் முதல் படங்களை வெளியிடுவதில்லை எனக் கூறி வருகிறார்களாம்.

எனவே, பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் மட்டுமே மே மாதத்தில் புதிய படங்கள் வெளியாகும் எனத் தெரிகிறது. இதனால், மே மாதம் வெளியாக தயாராக இருக்கும் 15க்கும் மேற்பட்ட படங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.