தயாரிப்பாளர் சங்கத்திற்கு போட்டியாக புதிய சங்கமா? அதிர்ச்சியில் விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கத்தை போலவே சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தையும் விஷாலின் இளைஞர் அணி கைப்பற்றியது. ஆனால் நடிகர் சங்கத்தில் தோல்வி அடைந்த சரத்குமார், ராதாரவி போன்று தயாரிப்பாளர் சங்கத்தினர் சும்மா இருக்காமல் விஷாலுக்கு போட்டியாக புதிய சங்கத்தை உருவாக்கியுள்ளனர். அதுதான் தமிழ் திரைப்பட வர்த்தக சபை

இந்த அமைப்பு கடந்த பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த நிலையில் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்கள் அதற்கு உயிர் கொடுத்து புதிய அமைப்பாக உருவாக்கியுள்ளனர். இதன் தலைவராக அபிராமி ராமநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தலைவர் பொறுப்பை ஏற்றவுடன் அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘ ‘இந்த அமைப்பு திரையுலகின் நலனை மட்டுமே பிரதான நோக்கமாகக் கொண்டு செயல்படும். இதன் நிலைப்பாடு யாருக்கும் எதிரானது அல்ல. அரசுகளிடம் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து தமிழ் சினிமா நலனுக்காக பாடுபடும்’ என்று கூறியுள்ளார்.

தயாரிப்பாளர் சங்கத்தலைவராக பொறுப்பேற்ற விஷால் இதுவரை ஆக்கபூர்வமாக எதுவும் செய்யவில்லை என்றும், பைரஸியை ஒழிப்பேன் என்று கூறிய அவர் அதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றும் தயாரிப்பாளர்கள் புலம்பி வருகின்றனர். மேலும் விஷால் அறிவித்த வேலைநிறுத்த போராட்டத்தை யாருமே சீர்யஸாக எடுத்து கொள்ளாதது அவருக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. இந்த நிலையில் இந்த புதிய தமிழ் திரைப்பட வர்த்தக சபை என்ற அமைப்பு மெல்ல மெல்ல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை டம்மி ஆக்கிவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.