இணையதளத்தில் புதிய படங்களை வெளியிட்ட பிரபல இணையதளத்தின் நிர்வாகி கைது

சூப்பர் ஸ்டார் முதல் பவர் ஸ்டார் வரை வெளியாகும் அனைத்து நடிகர்களின் படங்களும் படம் வெளியான நாளிலேயே திருட்டுத்தனமாக சில இணையதளங்களில் வெளியாகிவிடுகின்றன. இதை தடுக்க திரையுலகத்தினர் பல்வேறு முயற்சிகள் எடுத்தும் அதற்கும் எந்த பலனும் இல்லாமலேயே இருந்து வந்தது. இதுகுறித்து, காவல்துறையிடம் முறையிட்டு அந்த இணையத்தை முடக்க முற்படும், தினமும் ஒரு இணையதளம் புதிய பெயரில் முளைத்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில், புதிய திரைப்படங்களை திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியிடும் பிரபல இணையதளத்தின் நிர்வாகி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. திரைப்படத்துறையை சேர்ந்த பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் அளித்த தகவலின்படி, கவுரி சங்கம் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் எந்த இணையதளத்தின் நிர்வாகி என்பது போலீசார் விசாரணைக்கு பிறகு தெரிய வரும் என்று கூறப்படுகிறது.

திருட்டுத்தனமாக படங்களை வெளியிட்ட இணையதளத்தில் நிர்வாகி போலீசாரால் கைது செய்யப்பட்ட விவரம் தெரிந்தவுடனேயே நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான நடிகர் விஷால் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்திற்கு நேரில் சென்று போலீசாரிடம் கைது செய்யப்பட்டவர் பற்றிய விவரங்களை கேட்டறிந்தார். கவுரிசங்கர் பிடிபட்டது திரையுலகத்திற்கு பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.