தமிழக பாஜக தலைவர் தமிழிசை மீது பாமகவினர் கடந்த சில நாட்களாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஆனால் இதற்கு கட்சியினர் யாருடைய ஆதரவும் இல்லாமல் தனியாக பதிலளித்து வருகிறார் தமிழிசை.

பசுமை வழிச் சாலைக்கு மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார் மருத்துவர் ராமதாஸ். மரங்களை வெட்டுவது குறித்து பாமக பேசலாமா என தொலைக்காட்சி ஒன்றில் கேட்டிருந்தார் பாஜக தலைவர் தமிழிசை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டனர் பாமகவினர். தமிழிசையை கண்டித்து தொடர்முழக்க போராட்டங்களை அறிவித்தனர்.

இந்த விவகாரத்தில் பாமகவினருக்கு தமிழிசை மட்டுமே தனியாக பதிலளித்துக்கொண்டிருக்கிறார். மற்ற தமிழக பாஜகவின் முக்கிய தலைவர்களான, பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், இல.கணேசன், ஹெச்.ராஜா உள்ளிட்ட யாரும் தமிழிசைக்கு ஆதரவாக பாமகவைக் கண்டித்து எதுவுமே பேசவில்லை.

இந்த விவகாரத்தில் தமிழிசையை மற்ற தலைவர்கள் தனித்துவிட்டிருப்பது அந்த கட்சியில் உள்ள கோஷ்டி பூசலை காட்டுவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. மேலும் தமிழிசைக்கும் தனிப்பட்ட ரீதியில் இது மன உளைச்சலை கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகார் டெல்லி மேலிடத்துக்கு தமிழிசை தரப்பில் இருந்து சென்றிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.