நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் நேற்று வெளியானது. அதில் மத்திய அரசின் தூய்மை இந்தியா, டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்களை விமர்சிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை.

நேற்று காலா திரைப்படம் பார்த்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, திரைப்படத்தைத் திரைப்படமாக மட்டுமே பார்க்க வேண்டும். திரைப்படத்துடன் அனைத்தையும் இணைந்து பார்த்தால் பிரிவுதான் ஏற்படும். தூய்மை இந்தியா திட்டத்தை விமர்சித்த மாதிரி இருக்கிறதாகச் சொல்வது ஏற்றுக்கொள்ள தக்கதல்ல. திரைப்படத்தையும் யதார்த்த உண்மையையும் இணைத்துப் பார்ப்பதால் பிரிவினைதான் வரும்.

அரசியல் வேறு திரைப்படம் வேறு. ரஜினி திரைப்படத் துறையில் இருந்துதான் அரசியலுக்கு வருகிறார். எனவே, அவர் அரசியல் பேசுவது அவரது சொந்த கருத்து என்றார்.

மேலும் இயக்குனர் ரஞ்சித் தானும் அரசியல்வாதி என்று கூறியதற்கு பதிலளித்த தமிழிசை, யார் வேண்டுமானாலும் அரசியல்வாதி ஆகலாம். ரஞ்சித் தன்னை அரசியல்வாதி என்று கூறுவது அவருடைய சொந்த கருத்து. என்னைப் பொறுத்தமட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல்வாதி ஆகலாம். நான் ஓர் அரசியல்வாதி என்ற முறையில் எல்லோரும் என் துறைக்கு வர ஆசைப்படுவது எனக்கு மகிழ்ச்சிதான் என்றார்.