தமிழக பாஜக தலைவர் தமிழிசை முன்னிலையில் தமிழக பாஜகவினர் செய்தியாளர்களிடம் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் தனது பேட்டியை தமிழிசை பாதியிலேயே நிறுத்திவிட்டு புறப்பட்டு சென்றுவிட்டார்.

நேற்று சென்னை திருமுல்லைவாயிலில் தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாஜக தமிழக தலைவர் தமிழிசை பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கேரள வெள்ளம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்துக்கொண்டிருந்தார். அப்போது பாரத் மாதா கி ஜே என பாஜக தொண்டர்கள் கோஷம் எழுப்பினர்.

இதனால் செய்தியாளர்கள் சந்திப்பில் இடையூறு ஏற்படுவதாக செய்தியாளர்கள் கூறினர். இதனால் ஆத்திரமடைந்த பாஜக தொண்டர்கள், செய்தியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உங்களை யார் வர சொன்னா என மாவட்ட நிர்வாகி ஒருவர் செய்தியாளர்களை தரக்குறைவாக பேசியுள்ளார்.

இதனையடுத்து தமிழிசை தலையிட்டு சமாதானம் செய்து வைத்தார். ஆனாலும் பாஜகவினர் மீண்டும் செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பொறுமையிழந்த தமிழிசை தனது பேட்டியை பாதியிலேயே நிறுத்திவிட்டு புறப்பட்டு சென்றார். இதனையடுத்து செய்தியாளர்கள் பாஜகவினர் மீது திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.