நேற்று நடைபெற்ற வேலூர் தொகுதி வாக்குப்பதிவு எண்ணிக்கை முடியும் முன்னரே அதிமுக வெற்றி பெற்றதாக பாஜக தமிழக தலைவர் அறிவித்தது கேலிக்குள்ளாகியுள்ளது.

பணப்பட்டுவாடாக் காரணமாக ரத்து செய்யப்பட்ட வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தல் கடந்த 5ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணும் பணி நேற்று நடைபெற்று திமுக 8000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் காலை முதலே திமுகவும் அதிமுகவும் மாறி மாறி முன்னிலை வகித்ததால் வெற்றியைக் கணிப்பது கடைசிவரை இழுபறியாகவே இருந்தது.  முதல் 6 சுற்று வாக்கு எண்ணிக்கைகளில் அ.தி.மு.க முன்னிலையில் இருந்தது. ஆனால் பிற்பகலுக்கு பிறகு தி.மு.கவின் கை ஓங்க தொடங்கியது. இறுதியாக 8141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடினார் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த்.

ஆனால் இது சம்மந்தமாக மதியம் பேட்டி அளித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் ’ அ.தி.மு.கவின் இந்த வெற்றி நாங்கள் எதிர்பார்த்ததுதான். இந்த வெற்றிக்காக அதிமுக மற்றும் பாஜக தொண்டர்கள் இணைந்து உழைத்துள்ளனர். இந்த வெற்றி வரப்போகிற சட்டமன்ற தேர்தலிலும் பிரதிபலிக்கும்’ என நம்பிக்கையாகக் கூறினார்.

ஆனால் கடைசியாக திமுக வெற்றி பெற்றதும் வழக்கம்ப்போல திமுகவினரும் நெட்டிசன்களும்  தமிழிசையை வறுத்தெடுக்க ஆரம்பித்தனர்.