கேரள வெள்ள பாதிப்புக்குத் தமிழக அரசும் ஒரு காரணம் என கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக 139 அடியாகக் குறைப்பது தொடர்பான வழக்கு ஒன்று உள்ளது. இந்த வழக்கில் நேற்று கேரள அரசு பிரமாணப் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் கேரள அரசு தமிழக அரசை குற்றம் சாட்டியுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்கத் தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை. இடுக்கியில் ஏற்பட்ட வெள்ளத்திற்குத் தமிழக அரசும் ஒரு காரணம். அணையில் இருந்து தண்ணீரை திடீரெனத் திறந்துவிட்டதே பாதிப்பிற்குக் காரணம். அணை நீர்மட்டத்தைப் படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்ற கேரளாவின் கோரிக்கையைத் தமிழக அரசு ஏற்கவில்லை.

எந்த முன்னறிவிப்பும் இன்றி ஆகஸ்ட் 15-ம் தேதி காலை 7 மணிக்கு தமிழக அரசு முல்லைப் பெரியாறில் இருந்து சுமார் 21188 கன அடி தண்ணீரை திறந்துவிட்டது. பின்னர் 8 மணிக்கு 35315 கன அடி தண்ணீரையும் திறந்துவிட்டது. இந்த தண்ணீர் இடுக்கி அணையை வந்து சேர்ந்தது. ஆனால் இடுக்கி அணை முன்பாகவே நிரம்பியிருந்தது.

இதனால் நாங்கள் இடுக்கி அணையைத் திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வெள்ளத்துக்கு முழுக்காரணம் முல்லைப் பெரியாறு அணையைத் தமிழக அரசு திறந்துவிட்டதுதான் என்று கூற முடியாது. ஆனால், அதுவும் ஒரு காரணம் என்று கேரள அரசு அந்த பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளது.