புதிய திரைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு தியேட்டர் வசூலை குறைக்கும் இணையதளமாக தமிழ்ராக்கர்ஸ் செயல்பட்டு வருகிறது.

பல வருடங்களாகவே இந்த இணையதளம் புதிய திரைப்படங்களை தியேட்டரில் வெளியாகும் அதே நாளில் வெளியிட்டு வருகிறது. இந்த இணையதளத்தின் மீது திரைத்துறையினர் பல புகார்கள் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. சர்கார் படத்தை ரிலீஸ் தேதியன்றே வெளியிடுவோம் எனக்கூறி அதேபோல் வெளியிடப்பட்டது.

அதை விட ஒரு படி மேலே சென்று, சமீபத்தில் அர்ஜூன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டா நடித்த டாக்ஸிவாலா திரைப்படம் தியேட்டரில் ரிலீஸாவதற்கு முன்பே தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதனால், தெலுங்கு மட்டுமில்லாமல் அனைத்து திரையுலகும் அதிர்ச்சி அடைந்தது.

தயாரிப்பாளர் சங்க தலைவராக பதவியேற்ற நடிகர் விஷால், தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்குவோம் என சவால் விட்டார். ஆனால், பல மாதங்கள் ஆகியும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பல தயாரிப்பாளர்கள் புகார் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகரும், தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி அளித்த பேட்டியில் “ தமிழ்ராக்கர்ஸ் இணையதளமே விஷாலுக்கு சொந்தமானதாக இருக்கலாம் என்கிற சந்தேகம் வருகிறது. மேலும், தயாரிப்பாளர் சங்கத்தில் ரூ.7 கோடி வரை முறைகேடு நடந்துள்ளது. இது விஷாலுக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.