பிரபல தமிழ்ராக்கர்ஸில் பேட்ட படம் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் ரஜினி, விஜய் சேதுபதி, சிம்ரன், திரிஷா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள பேட்ட திரைப்படம் இன்று காலை உலகமெங்கும் வெளியானது.

இப்படம் ரஜினி ரசிகர்கள் மட்டுமில்லாமல் பொதுவான ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. நீண்ட வருடங்களுக்கு பிறகு பழைய ரஜினி ஸ்டைலை இப்படத்தில் பார்ப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். படம் நேர்மறையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

இந்நிலையில், புதிய திரைப்படங்களை திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து வெளியிடும் தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் பேட்ட படம் வெளியாகியுள்ளது.

இன்று வெளியான பேட்ட, விஸ்வாசம் இரு படங்களும் இணையத்தில் வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆனாலும், அதையும் மீறி தமிழ்ராக்கர்ஸ் பேட்ட படத்தை வெளியிட்டு படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்கார் படத்தையும் இணையத்தில் வெளியிட நீதிமன்றம் தடை விதித்திருந்தது. ஆனால், அதையும் மீறி தமிழ்ராக்கர்ஸ் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.