தமிழகத்தில் உள்ள ஆசிரியைகளுக்குப் பாலியல் ரீதியில் ஏற்படும் தொந்தரவுகளுக்கு தீர்வு காண தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளார். பாலியல் நீதியாக தொந்தரவு ஏற்பட்டால் ஆசிரியைகள் 14417 என்ற இலவச தொலைப்பேசி எண்ணில் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், அனைத்து ஆசிரியர் காலிப்பணியிடங்களும் நிரப்பப்படும். ஆசிரியைகள் ஒன்பது மாதம் பிரசவ விடுப்பில் செல்லும்போது அந்தப் பணியிடத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு தடையில்லா கல்வி வழங்கப்படும்.

ஆசிரியைகளுக்குப் பாலியல் ரீதியில் தொந்தரவு ஏற்பட்டால் உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம் அல்லது 14417 என்ற இலவச தொலைப்பேசி எண்ணிலும் புகார் கொடுக்கலாம். அந்தப் புகார்கள் மீது 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் ஆசிரியை கொடுக்கும் தகவல்கள் பாதுகாக்கப்படும் என்றார்.

மேலும், வரும் காலங்களில் அரசுப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு, காலணியாக ஷூ வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 6, 7, 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மொழித்திறனை மேம்படுத்த பயிற்சி அளிக்கப்படும். அதற்கான பணிகள் அடுத்த மாத இறுதிக்குள் தொடங்கப்படும் என டுவிட்டரில் கூறியுள்ளார் அமைச்சர் செங்கோட்டையன்.