சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் பாஜகவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ஆட்சி அமைக்க முடியாமல் போனது. இருப்பினும் பாஜக இருக்கிற கட்சிகளில் அதிக இடங்களில் வெற்றி பெற்றதால் அதனை வரவேற்று தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் கடிதம் ஒன்றை பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு அனுப்பினார்.

ஓபிஎஸ் அனுப்பிய இந்த கடிதம் ஊடகங்களில் வெளியாகி அனைவராலும் பெரிதும் விமர்சிக்கப்பட்டது. அந்த கடிதத்தில், பாஜகவின் இந்த வெற்றி தென்னிந்தியாவில் பாஜகவுக்கான பிரமாண்டமான நுழைவு என குறிப்பிட்ட அவர் பாஜக தென்னிந்தியாவுக்குள் நுழைவதை வரவேற்பதாக கூறியிருந்தார்.

ஓபிஎஸின் இந்த கருத்துக்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக விமர்சிக்கப்பட்டது. மேலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் ப.சிதம்பரம் இதற்கு தனது டுவிட்டர் மூலமாக பதிலடி கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் அதிமுகவிலும் ஓபிஎஸ் கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக மக்களவை உறுப்பினரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரையிடம் செய்தியாளர்கள் ஓபிஎஸ் பாஜகவை வரவேற்றது குறித்து கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த அவர், கர்நாடகாவில் பாஜக பெற்ற வெற்றி தென்னிந்திய நுழைவுக்கான மணியோசை என்று துணை முதல்வர் ஓபிஎஸ் கூறியது தவறான கருத்து. தமிழகத்தில் திராவிட கட்சிகள்தான் இடம் வகிக்கும். தேசியக் கட்சிகளுக்கு இடமில்லை என்று ஓபிஎஸை விளாசும் விதமாக கருத்து தெரிவித்தார். இதனால் சொந்த கட்சியிலேயே ஓபிஎஸ் கருத்துக்கு மரியாதை இல்லை என சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.