துணை சபாநாயகர் தம்பிதுரை பாஜகவிற்கு எதிராக நாடாளுமன்றத்தில் இன்று பேசிய விவகாரம் பாஜகவினருக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடரின் விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய தம்பிதுரை பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசினார்.

பாஜக கொடுத்த எந்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை. பாஜக மிக மோசமாக தோற்றுவிட்டது. மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையல, சிறு, குறு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். ஜி.எஸ்.டி மூலம் மாநில அரசுகளின் அதிகாரத்தை மத்திய அரசு பறித்துவிட்டது. மாநில அரசின் உரிமைகளை பறிப்பதில் காங்கிரஸ் அரசுக்கும் பாஜக அரசுக்கும் எந்த வித்தியாசமுமில்லை என மிக கடுமையாக பாஜகவை விமர்சித்து பேசினார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத பாஜக எம்.பி.க்கள் தம்பிதுரை பேசவிடாமல் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவுள்ளது. ஆனால், அதிமுகவின் பிரதிநிதியான தம்பிதுரை பாஜகவை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் கடுமையாக விமர்சித்து பேசிவருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.