அமமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள தங்க தமிழ்ச்செல்வன் சிறைக்கு சென்று சசிகலாவை சந்தித்து தினகரன் குறித்துப் பேச இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த வாரம் முழுவதும் தமிழக அரசியலில் பரபரப்பாக விவாதிக்க பட்ட விஷயம் தங்க தமிழ்ச்செல்வன் – டிடிவி முட்டல் மோதல்தான்.  இப்போது தங்க தமிழ்ச்செல்வனின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பதவிகளும் பறிக்கப்பட்டுள்ள நிலையில் அவரின் அடுத்த நகர்வு என்ன என்பதை அரசியல் களம் உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்துள்ளது.

திமுக , அதிமுக ஆகிய இரண்டுக் கட்சிகளும் அவருக்காக வலைவீசுவதாகக் தெரிகிறது. ஆனால் தங்க தமிழ்ச்செல்வனோ பெங்களூர் சென்று சசிகலாவை சந்திக்கும் திட்டத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்துவது போல சென்னை விமான நிலையத்தில் நிரூபர்களின் கேள்விக்குப் பதில் அளித்த அவர் ‘ என் மீதான நடவடிக்கைகள் எல்லாம் சசிகலா ஒப்புதலோடுதான் எடுக்கப்படுவதாக சொல்கிறார்கள். ஆனால் அது உண்மையா எனத் தெரியவில்லை. அவரை நாங்கள் சந்திப்பதற்கான வாய்ப்புகளே இல்லாமல் செய்துவிட்டார்கள். இந்த ஒன்றரை வருடத்தில் அவரை ஒரே ஒருமுறைதான் சந்தித்துள்ளேன். தற்போது வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன். இந்தக் கட்சியை தொடங்கியதிலேயே சசிகலாவுக்கு உடன்பாடு இருக்கிறதா எனத் தெரியவில்லை’ எனக் கூறியுள்ளார்.