தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தனிக்கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன் வந்தார். ஆனால் அவரால் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. இந்த நிலையில் கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸில் தஞ்சம் அடைந்தார்

இந்த நிலையில் தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் அதே நிலைமை வருமா? என்ற கேள்விக்கு ரஜினியுடன் ஒருசில படங்களில் நடித்த நடிகை ரோஜா கூறியபோது, ‘சிரஞ்சீவி ஆந்திராவில் அரசியல் கட்சியை தொடங்கியபோது இருந்த சூழ்நிலை வேறு. அப்போது ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஆட்சி புரிந்தார். பலமான எதிர்க்கட்சித் தலைவராக சந்திரபாபு நாயுடு இருந்தார். இவர்களை எதிர்த்து அவரால் அரசியலில் சாதிக்க முடியவில்லை. ஆனால் ரஜினியின் நிலை வேறு. தமிழகத்தின் இப்போதைய அரசியல் சூழல் வேறு.”

”மறைந்த முதல்வர் ஜெயலலிதா இறந்த பின்னர், தமிழகத்தில் அரசியல் நிலை மாறிவிட்டது. தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் அரசியலை மக்கள் வெறுத்து வருகின்றனர். தமிழகத்தை கோலோச்சிய இரு மாபெரும் திராவிட இயக்கங்களின் தலைவர்கள் இடங்கள் தற்போது வெற்றிடமாக உள்ளன. இதனை நிரப்ப ஒரு நல்ல மனிதர் தேவை. அது ரஜினிதான்” என்று கூறினார்.