தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் போராட்டம் நேற்று வெடித்தது. இந்த போராட்டத்தை ஒடுக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த துப்பாக்கிச்சூட்டால் இறந்தவர்கள் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் சாமானிய மக்களை மிகவும் பாதித்துள்ளது. போராடிய தன் நாட்டு மக்களை அரசு ஈவு இரக்கமின்றி மிருகத்தைப்போல சுட்டுத்தள்ளியுள்ளது. இந்த சம்பவம் திட்டுமிட்டு நடத்தப்பட்ட படுகொலை என அங்குள்ள மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

போராட்டம் நடத்தும்போது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறை கூறுகிறது. ஆனால் துப்பாக்கிச் சூடுக்கான எந்த முறையையும் அவர்கள் பின்பற்றவில்லை. துப்பாக்கிச்சூட்டுக்கு ரப்பர் குண்டுகளை பயன்படுத்தவில்லை. முழங்காலுக்குக் கீழ் சுடாமல் நெஞ்சு, தலை, தொண்டை, வாய் என்று சுட்டவுடன் உயிர்போகுமாறு பார்த்துப் பார்த்து சுட்டுக் கொன்றிருக்கிறது காவல்துறை.

இந்த துப்பாக்கிச் சூடு கூட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு அல்ல மாறாக திட்டமிட்டு குறிவைத்து நடத்தப்பட்ட பச்சைப் படுகொலை என அங்குள்ள மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஒரு வேன் மீது காவலர் ஒருவர் ஏறி சீருடை அணியாத நிலையில் சுட்டுத்தள்ளும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

அந்த காவலர் பயன்படுத்திய துப்பாக்கி ரைஃபிள் கன் எனப்படும் வகையானது. இதை போலீஸார் பயன்படுத்த அனுமதி இல்லை என்று கூறப்படுகிறது. சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் வரை குறிபார்த்து இலக்கை சுடும் இந்த வகைத் துப்பாக்கிகளை ஏன் போலீஸார் போராட்டத்தை அடக்கப் பயன்படுத்தினார்கள் என கேள்விகள் எழுகின்றன.