மெர்சல் பட விவகாரத்தில் பிரபலங்களின் ஆதரவு

11:14 காலை

சமீபத்தில் தீபாவளி தினத்தன்று இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான ‘மெர்சல்’ திரைப்படம் வாதாடப்படும் மையமாக மாறியுள்ளது. இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியா தொடர்பான கருத்துகளே இதற்கு காரணமாக அமைந்துள்ளன. குறிப்பாக பாரதிய ஜனதா கட்சியிலிருந்தே பெரும் எதிர்ப்புகள் கிளம்பிய வண்ணம் உள்ளன. அக்கட்சியினர் ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியா தொடர்பான கருத்துகள் தவறான செய்தியை வழங்குவதாகவும் எனவே இக்கருத்துகள் நீக்கப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து குரலெழுப்பி வருகின்றனர். சினிமாவில் வந்த ஒரு கதாப்பாத்திரத்தின் வசனத்திற்கு இவர்கள் காட்டும் அக்கறையை விவசாயிகள் டெல்லியில் போராடிய போதும் காட்டியிருக்கலாமே என்று ஒரு சில தரப்பினர் வசனங்கள் நீக்கப்படுவதற்கு தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்து வருகின்றனர். இந்த விஷயத்தில் தல ரசிகர்களும் தளபதிக்கு ஆதரவு தெரிவித்து வருவது கூடுதல் சுவாரசியம்.

இப்படம் வெளியான நாள் முதல் பல ஊடங்களில் பேசப்படும் தலைப்பாக மாறியுள்ளதோடு, தேசிய அளவில் பல துறை சார்ந்த பிரபலங்களின் ஆதரவும் வலுத்து வருவது மறுப்பதற்கு இல்லை. மெர்சல் பட விவகாரத்தில் தங்களது ஆதரவை வலைப்பதிவுகளில் பதிவுசெய்துள்ள பிரபலங்களின் கருத்துகள் இதோ உங்களுக்காக:

கமல்: மெர்சல் படம் ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. அதை மீண்டும் தணிக்கை செய்ய வேண்டாம். தர்க்கரீதியான பதிலுடன் எதிர்மறையான விமர்சனம். விமர்சகர்களை மௌனமாக்க வேண்டாம். இந்தியா தனது கருத்தை சுதந்திரமாக வெளிப்படுத்தும் போதே பிரகாசிக்கும்.

அரவிந்தசாமி: ஜி.எஸ்.டி உள்ளிட்ட வரி விதிப்புகளில் தங்களின் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட்டுள்ளது தற்போது அரசை அவர்கள் கேள்வி கேட்பது எப்படி தவறாகும்?

குஷ்பு: ப.ஜ.க தற்போது தலைநகரம் படத்தில் வரும் வடிவேலு போல் இருக்கிறது, ‘பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மென்ட் வீக்’ என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

திரைப்பட ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம்: மெர்சல் பட விவகாரத்தில் கருத்து சுதந்திரத்தின் கழுத்து நெரிக்கப்படுகிறது.

ஸ்ரீப்ரியா: உலகளவில், பேசப்படும் வசனத்தை திரைப்பட வசனகர்த்தா எழுதி தந்து அதை நடிகர் பேசுகிறார், இதில் விளக்கம் கேட்பது நேர்மையாக இருக்காது

காயத்ரி ரகுராம்: திரைப்படத்தில் ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்கும் நடிகர் வசனங்களை எழுதுவது இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கலாம். நடிகர் மீது குறை சொல்ல கூடாது. மெர்சல் படம் தெளிவாகத் தணிகை செய்யப்பட்டுள்ளது.

ஜி.வி. பிரகாஷ் குமார்: முழு கருத்து சுதந்திரமே மிக சிறந்த ஜனநாயகம்! இந்தியா மிக சிறந்த ஜனநாயக நாடு என்பதில் பெருமை கொண்டிருக்கிறேன். மீண்டும் சென்சார் எங்களுக்குத் வேண்டாம்.

கரு. பழனியப்பன்: “ஜோசப் விஜய், ஜூனைத், ஜமீலா, ஜனநாதன், ஜக்கம்மா, என எல்லோரும் சேர்ந்திருப்பது தானே இந்தியா? இல்லையெனில் சொல்லிவிடு, நாங்கள் தமிழர்களாய் வாழ்வோம்.”

RJ பாலாஜி: அரசாங்கம் அரசியில் வாதிகள் கொள்கைகள் திரைப்படங்கள் எனும் மக்கள் தொடர்புடைய அனைத்தும் கேள்வி கேட்கப்படும், விமர்சனம் செய்யப்படும். அதை தடுத்து நிறுத்த நினைப்பது வெட்க கேடாகும்.

பார்த்திபன்: இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரான செயல்.

ரவீந்திர ஜடேஜா: மெர்சல் திரைப்படம் தவறான கருத்துகளைப் பரப்பி வருகிறது என நீங்கள் கருதினால், அவர்களை முடக்க வேண்டியதில்லை அதற்கு மாறாக அவர்கள் கூறியது தவறு என உங்கள் செயல்கள் மூலம் விளக்குங்கள்.

படத்தில் வரும் கதாப்பாத்திரம் தனது கருத்தைத் தேர்விக்க முடியாது எனில் நாட்டு மக்களின் நிலை என்ன. ப.ஜ.க அனுப்பும் செய்தி இதுவா? என பலர் கேள்வி எழுப்புகின்றனர். இருப்பினும் இந்த சர்ச்சையைத் தொடர்ந்து ஸ்ரீ தேனாண்டாள் பில்ம்ஸ் நிறுவனம் சர்ச்சைக்குரிய கருத்துகளை நீக்குவதற்கு ஒப்புக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

The following two tabs change content below.
பிரிட்டோ

பிரிட்டோ

பத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393