படங்களை வெளியிடும் க்யூப் மற்றும் யுஎஃப்ஓ உள்ளிட்ட நிறுவனங்களின் கட்டணம் அதிகமாக இருப்பதாகக் கூறி கடந்த 1ஆம் தேதி முதல் புதிய படங்களை வெளியிடபோவதில்லை என்று முடிவெடுத்து தயாரிப்பாளர்கள் சங்கம் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனா். தற்போது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் மார்ச் 16ஆம் தேதி முதல் திரையரங்குகள் மூடப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

டிஜிட்டல் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனா். இந்த பேச்சு வார்த்தை தோல்வியை தழுவியது. இதனால் புதிய படங்களை வெளியிடுவது இல்லை என்று தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்தது. இதனால் திரையங்குகளில் புதிய படங்கள் எதுவும் வெளியாக காரணத்தால் திரையரங்குகளில் ஏற்கனவே வெளியான படங்களையே திரும்ப திரையிடப்பட்டு வந்தன.

சென்னையில் இன்று மாலை திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டம் நடைபெற்றது. ரோகிணி திரையரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 180க்கு அதிகமான திரையரங்கு உரிமையாளர்கள் கலந்தக்கொண்டனா். மூன்று வருடத்திற்கு ஒருமுறை லைசென்ஸை புதுப்பிக்க வேண்டும், 8 சதவீத கேளிக்கை வரியை முற்றிலும் நீக்க வேண்டும், பெரிய திரையரங்குகளில் இருக்கைகளைக் குறைக்க அனுமதி தரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசிடம் வைப்பது என முடிவு செய்யப்பட்டது.

இந்த கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு ஆணை பிறப்பிக்க வேண்டும். ஒரு வாரத்திற்கு ஆணை பிறப்பிக்கவில்லை என்றால் மார்ச் 16ஆம் தேதி முதல் திரையரங்குகளை மூடுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.