மே 17 இயக்கத்தை சேர்ந்த அதன் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை காவல்துறை தேசத் துரோக வழக்கின் கீழ் கைது செய்துள்ளது. இதனையடுத்து அவரக்கு எது நடந்தாலும் தமிழக காவல்துறையே பொறுப்பு என மே 17 இயக்கம் எச்சரித்துள்ளது.

ஐ.நா மனித உரிமை ஆணைய அமர்வில் கலந்துகொண்டு பெங்களூரில் நடக்க உள்ள ஒரு கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்த திருமுருகன் காந்தியை பெங்களூர் விமானநிலையத்தில் காத்திருந்து நேற்று தேசத் துரோக வழக்கில் கைது செய்தனர்.

திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்ட சம்பவத்துக்கு டிடிவி தினகரன், வைகோ, சீமான், திருமாவளவன் உள்ளிட்ட பல தலைவர்கள் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் மே 17 இயக்கம் சார்பாக அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. அதில் திருமுருகன் காந்திக்கு ஏதாவது நடந்தால் தமிழக காவல்துறை தான் பொறுப்பு என கூறியுள்ளது.

பெங்களூரில் கைது செய்து வைக்கப்பட்டுள்ள மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள் இன்று இரவு தமிழ்நாடு காவல்துறையினால் சென்னைக்கு கொண்டுவரப்பட உள்ளார். தமிழகம் அறிந்த ஒரு மனித உரிமை அரசியல் செயல்பாட்டாளரான திருமுருகன் காந்தியை அழைத்து வருவதற்கு, ஒரு பயங்கரவாதியை அழைத்து வருவதைப் போன்று 10க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான காவல்துறையினர் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

ஒரு மனித உரிமை செயல்பாட்டாளரை அழைத்து வருவதற்கு எதற்கு இத்தனை காவல்துறையினர் வரவேண்டியுள்ளது என்பது இயக்கத் தோழர்களாகிய எங்களுக்கு சந்தேகத்தினை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது.

பெங்களூரிலிருந்து புறப்பட்ட அடுத்த விநாடியிலிருந்து எங்கள் ஒருங்கிணைப்பாளரின் பாதுகாப்பு என்பது தமிழ்நாடு அரசின் கையில் உள்ளது என்பதனை தெரியப்படுத்த விரும்புகிறோம். எங்கள் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களுக்கு உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ எந்த பாதிப்பு நிகழ்ந்தாலும் அதன் முழுப்பொறுப்பு தமிழ்நாடு அரசினையும், காவல்துறையினையுமே சாரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.