பெரிய நடிகர்கள் நடித்து வெளியாகும் படங்கள் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலை அள்ளுவதாக தயாரிப்பாளர்கள் தரப்பு கூறி வருவது வாடிக்கையான ஒன்றாக தமிழ் சினிமாவில் மாறி வருகிறது.

கபாலி, தெறி, ரெமோ, சிங்கம் 3, பைரவா ஆகிய படங்கள் ரூ.100 கோடி வசூலை அள்ளிவிட்டதாக அப்படத்தின் தயாரிப்பாளர்கள் கூறினார். ஆனால், இந்த படங்கள் வினியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், படத்தின் வெற்றிக்காக தயாரிப்பாளர்கள் தவறான கருத்துகளை கூறி வருவதாக வினியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் சமீபத்தில் கருத்து தெரிவித்து பரபரப்பை கிளப்பினார்.

சிங்கம்3 படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள் தங்கள் கார்களை விற்று வரும் வேளையில், அப்படத்தின் ஹீரோ சூர்யா, இயக்குனர் ஹரிக்கு கார் ஒன்றை பரிசாக தருகிறார். அதேபோல், பைரவா படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள் தங்கள் தங்க நகைகளை விற்று வரும் வேளையில், அப்படத்தின் ஹீரோ விஜய் அப்படத்தின் இயக்குனருக்கு தங்க சங்கிலி ஒன்றை பரிசாத அளிக்கிறார் என ஏகத்துக்கும் எகிறினார் சுப்பிரமணியம்.

இந்த விவகாரம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவருடைய கருத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் சிலர் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், பைரவா படத்தில் தனக்கு ரூ. 1.64 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக சுப்பிரமணியம் கூறியுள்ளார். அவரின் புகாருக்கு விஜய் தரப்பிலோ அல்லது தயாரிப்பாளர் தரப்பிலிருந்தோ எந்த பதிலும் கொடுக்கவில்லை. எனவே, அவர் கூறுவத் உண்மைதான் என தமிழ் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.