துபாயில் 2.0 படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று இரவு நடந்தது. இதில் படத்தின் நாயகன் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், நாயகி எமி ஜாக்ஸன், வில்லன் அக்ஷய் குமார், இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இந்திய நேரப்படி இரவு 11.30-க்கு இசை விழா நிகழ்ச்சி தொடங்கியது. இயக்குநர் ஷங்கர், ஏஆர் ரஹாமான், அக்ஷய் குமார், எமி ஜாக்ஸன், சுபாஷ்கரன் என ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தினர்.

      இறுதியில் பலத்த கரகோஷங்கள், ஆர்ப்பரிப்புகளுக்கிடையில் ரஜினிகாந்த் மேடைக்குள் நுழைந்தார். இந்தியா என்றல்ல.. உலகின் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு ரஜினிக்கு மிகப் பிரமாண்டமாக வரவேற்பும் வாழ்த்தொலிகளும் அமைந்தன. அந்த வாழ்த்தொலிகளும் கரகோஷங்களும் விசில் மழையும் அடங்கவே சில நிமிடங்களானது.இவை அனைத்தையும் ஒரு புன்னகை மற்றும் வணக்கத்துடன் கடந்து செல்ல நினைத்த ரஜினியை, மீண்டும் மேடைக்கு அழைத்து வந்தார் தமிழ்ப் பதிப்புக்கு தொகுப்பாளராக இருந்த ஆர்ஜே பாலாஜி.ரஜினியிடம், இந்த நாற்பது ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் யாருக்கும் கிடைக்காத அன்பு, புகழ், இது சென்னை இல்லை, மதுரை, தூத்துக்குடி இல்லை… துபாய்… இங்கு உங்களுக்குக் கிடைத்துள்ள அன்பு… இதுபற்றி? என்று கேட்டார்.அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், ‘நமஸ்காரம், நமஸ்தே, அஸ்லாமு அலைக்கும்… இந்த நாப்பது வருஷ சினிமா வாழ்க்கை எப்படி ஓடுச்சின்னே தெரியல… இப்பதான் நாலஞ்சி வருஷமா இருக்கிற மாதிரி இருக்கு. அது எல்லாமே ஆண்டவனோட அருள், மக்களுடைய அன்புதான் காரணம்.பணம் பேர் புகழ் எல்லாமே மத்தவங்க பார்க்குறதுக்குத்தான் நல்லாருக்கும். ஒரு அளவுக்குத்தான் அவை சந்தோஷத்தைக் கொடுக்கும். ஆரம்பத்துல சந்தோஷத்தைக் கொடுக்கும்.ஆண்டவன் மேல நம்பிக்கை இருக்கிறதால ரஜினிகாந்தாக இருப்பது சந்தோஷத்தைக் கொடுக்குது, இல்லாம இருந்திருந்தா ரொம்ப கஷ்டத்தைக் கொடுத்திருக்கும்.

       என் ரசிகர்களுக்கு நான் சொல்வது.. நல்ல படங்களை ஆதரியுங்கள். அப்படி நல்ல படங்களா இல்லாம, சுமாரான படங்களா இருந்தாலும் சோஷியல் மீடியால அந்த படங்களையும் நடிகர்களையும் காயப்படுத்தாதீங்க,’ என்றார். ரஜினிகாந்த் மேடையில் தோன்றிய போது வரலாறு காணாத வரவேற்பு அவருக்கு அளிக்கப்பட்டது. அவரது பேச்சுக்கு பார்வையாளர்களிடையே மிகப்பெரிய வரவேற்பும் கைத்தட்டலும் கிடைத்தன..