விஜய் படத்தில் இருந்து விலக சூர்யா காரணமா? ஜோதிகா விளக்கம்

இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 61’ படத்தின் மூன்று நாயகிகளில் ஒருவராக முதலில் ஜோதிகாதான் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென படப்பிடிப்பு தொடங்குவதற்கு ஒருசில நாட்களுக்கு முன்னர் ஜோதிகா அந்த படத்தில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்தார்.

ஜோதிகா விஜய் படத்தில் இருந்து விலகியதற்கு சூர்யா கொடுத்த அழுத்தமே காரணம் என்று ஃபேஸ்புக், டுவிட்டரில் செய்தி பரவியது. இந்நிலையில் ‘மகளிர் மட்டும்’ புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் ஜோதிகா இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ளார். அவர் கூறியது இதுதான்:

‘விஜய் 61’ படத்தில் நடிக்காததற்கு எனது கணவர் சூர்யாவும், எனது குடும்பத்தினரும் காரணமல்ல. வெளியிலிருந்து வரும் அழுத்தத்திற்காக, யாரும் கடைசி நேரத்தில் படத்திலிருந்து வெளியேற மாட்டார்கள். எனக்கு அந்த படத்தில் சில பிரச்சனைகள் இருந்தது. அவை பின்னர் சுமூகமாக முடித்து வைக்கப்பட்டது. அது என்ன பிரச்சனைகள் என்பது குறித்து இங்கு விவாதிக்க விரும்பவில்லை. ஆனால் சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்கள் முற்றிலும் பொய்யானவை.” என்று ஜோதிகா தெரிவித்தார்.

ஏற்கனவே சமீபத்தில் நடந்த ‘மகளிர் மட்டும்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின் போதும் என்று தைரியமாக பேசிய ஜோதிகா, ‘விஜய் 61’ படத்தில் தனக்கு மூன்றாவது ஹீரோயின் என்பதால்தான் விலகிவிட்டாரா? என்றும் கூறப்படுகிறது.