தமிழ் சினிமாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே படங்களின் ரிலீஸ் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு வருகிறது. வாரம் ஒன்றுக்கு 4 படங்களுக்கும் குறைவில்லாமல் படங்கள் ரிலீசாகிக் கொண்டிருக்கிறது. பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும்போது மட்டும் இந்த எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படுகிறது. அதுவும், அத்தி பூத்தாற்போல்தான் நடக்கிறது.

இப்படியிருக்கையில் இந்த வாரம் நாளை ஒன்றல்ல… இரண்டல்ல… மொத்தம் 13 படங்கள் ரிலீசாகவிருக்கின்றன. அவை, ஆயிரத்தில் இருவர், நெறி, தெரு நாய்கள், பிச்சுவாகத்தி, கொஞ்சம் கொஞ்சம், வல்லதேசம், களவு தொழிற்சாலை, காக்கா, பயமா இருக்கு, நான் ஆணையிட்டால், திட்டி வாசல் ஆகிய 11 நேரடி தமிழ் படங்களும், போலீஸ் ராஜ்ஜியம், கிங்ஸ் மேன் ஆகிய டப்பிங் மொழி திரைப்படங்களும் ரிலீஸ் ஆகின்றன.

இவைகளில் ஆயிரத்தில் இருவர், நான் ஆணையிட்டால் ஆகிய இரு படங்கள் மட்டுமே கொஞ்சம் பெரிய படங்கள். மற்றபடி, அனைத்தும் சிறிய பட்ஜெட் படங்கள்தான். ஒன்றிரண்டு படங்கள் ரிலீஸ் ஆனாலே திரையரங்குக்கு மக்கள் கூட்டம் வருவது அரிதாகி வரும் இந்நேரத்தில், ஒரே வாரத்தில் சிறிய பட்ஜெட் படங்கள் எக்கச்சக்கமாக ரிலீஸ் ஆவது தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமாக இருக்குமா? என்பது பலரது கேள்வியாகவும் இருந்து வருகிறது.