பாலிவுட் நடிகர் அமீர்கான் மற்றும் இந்திய சினிமாவின் ஐக்கானாக விளங்கும் அமிதாப் பச்சன் முதன் முறையாக இணைந்து நடித்துள்ள படம் ‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’.

இத்திரைப்படத்தில் அமீருக்கு ஜோடியாக கத்ரீனா கைஃப் நடித்துள்ளார். இவர்களுடன், ‘டங்கல்’ படத்தில் மூத்த மகளாக நடித்த பாத்திமா சனா முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார்.

இந்த படத்தின் டிரெய்லர் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது இப்படத்தின் மேக்கிங் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்படமானது ‘கன்பெஷன் ஆஃப் ஏ தக்’ என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டு வருகின்றது. இப்படத்தை விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கியுள்ளார். அஜய்- அதுல் இருவரும் இசையமைத்துள்ளனர்.

சுதந்திரப் போராட்ட கதையை மையமாக வைத்து பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டிரெய்லர் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்துக்கு, ஏற்கனவே மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், ஹிந்தியில் உருவாகும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட உள்ளது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ள நிலையில், இப்படம் வருகிற நவம்பர் 8-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.