மத்திய அரசு கொண்டுவரவுள்ள அணைகள் பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

அணைகள் பாதுகாப்பு மசோதா குறித்து கடந்த 2010-ஆம் ஆண்டு மாநில அரசுகளின் கருத்தை மத்திய அரசு கேட்டது. மாநில உரிமைகளில் மத்திய அரசு தலையிடும் விதத்தில் இந்த மசோத இருப்பதால் அப்போதே இந்த மசோதாவுக்கு ஆட்சேபம் தெரிவித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா.

பின்னர் 2016-ஆம் ஆண்டு மாநில அரசுகளை கலந்தாலோசிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் அணைகள் பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதா 2018-க்கு மத்திய அமைச்சகம் கடந்த 13-ஆம் தேதி ஒப்புதல் வழங்கியது. அடுத்த கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்து சட்டம் ஆக்கவும் திட்டமிட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாநிலங்களின் உரிமைகளில் மத்திய அரசு தலையிடுகிறது என்று பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், இன்று சட்டமன்றத்தில் அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய அரசு நிறுத்திவைக்க வேண்டும் என்று கூறி தனித் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதனை ஒருமனதாக நிறைவேற்றியுள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள அணைகள் பாதுகாப்பு மசோதாவை நிறுத்திவைக்க வேண்டும். அனைத்து மாநிலங்களையும் கலந்தாலோசித்து ஒருமித்த கருத்து ஏற்பட்ட பின்னரே மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.