அஜித் ரசிகர்களுக்கு இன்று மாலை காத்திருக்கும் சிறப்பு விருந்து

அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘விவேகம்’. இப்படம் வருகிற ஆக.24-ந் தேதி வெளியாகவிருக்கிறது. அஜித்-சிவா கூட்டணியில் உருவாகியுள்ள 3-வது படம் என்பதால் இப்படத்திற்கு பெரிதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், இப்படம் முழுக்க வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. அஜித் இப்படத்தில் வெளிநாட்டு உளவாளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதனால், இப்படத்தில் அஜித்தின் லுக்கை பார்ப்பதற்கு அனைவரும் ரொம்பவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இப்படத்தின் கதாநாயகிகளாக காஜல் அகர்வால், அக்ஷராஹாசன் ஆகியோரும் நடித்துள்ளனர். முக்கியமான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார். இதனால், இப்படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்று சொன்னால் மிகையாகாது. இந்நிலையில், இப்படத்தில் அமைந்துள்ள சர்வைவா என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து வெளியான சில பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றன.

இந்நிலையில், இப்படத்தின் முழு ஆல்பத்தையும் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்போவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இது அஜித் ரசிகர்களுக்கு உண்மையிலேயே சிறப்பான விருந்தாக அமையும் என்பதில் துளியளவும் ஐயமில்லை. முழு ஆல்பத்தையும் ரசிக்க ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.