முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் டெல்லி எயிம்ஸ் மருத்துவமனையில் இன்று மாலை காலமானார். இதனையடுத்து தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் அவரது மறைவையொட்டி பொது விடுமுறை அறிவித்துள்ளது.

பாஜகவை சேர்ந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் மற்றும் முதுமை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். பக்கவாதத்தால் பேசும் திறனை இழந்த அவருக்கு சர்க்கரை வியாதி, மாரடைப்பு, சிறுநீரக தொற்று உள்ளிட்ட பல உடல்நலக்குறைவு இருந்தது.

இதனையடுத்து கடந்த சில தினங்களாக அவர் டெல்லி எயிம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்து வந்தார். அவரது உடல் நலம் குறித்து, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் விசாரித்து வந்தனர். கடந்த இரு தினங்களாக அவரது உடல்நலம் மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. இந்நிலையில் இன்று மாலை அவர் உயிரிழந்ததாக டெல்லி எயிம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அவரது மறைவை அனுசரிக்கும் விதமாக தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் நாளை செயல்படாது. அதே போல புதுச்சேரி, மத்திய பிரதேசம், ஜார்கண்ட், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களும் விடுமுறை அறிவித்துள்ளது.