நடிகை திரிஷாவின் முன்னாள் காதலரும், தயாரிப்பாளருமான வருண்மணியன், ‘காவியத்தலைவன்’, ‘வாயை மூடி பேசவும்’ உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இவருக்கும் திரிஷாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் திடீரென திருமணம் நின்றுவிட்டது.

இந்நிலையில், வருண்மணியன் வேறு ஒருவரை மணக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால், கடந்த சில மாதங்களாகவே அவருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வந்துள்ளது. இதையொட்டி அவருக்கு போலீஸ் பாதுகாப்பும் போட்டிருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து அவருக்கு எந்த மிரட்டலும் வராமல் இருக்கவே, கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வருண்மணியன் நேற்று தன்னுடைய நந்தனம் அலுவலகத்தில் பணியை முடித்துவிட்டு லிப்ட் வழியாக கீழே இறங்கி வந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் இவருடன் லிப்டில் பயணித்துள்ளார்கள்.

லிப்டில் ஏறிய சில நிமிடங்களிலேயே அந்த இரண்டு பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் லிப்டின் உள்ளேயே வருண்மணியனை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. உடனே, வருண்மணியன் கூச்சலிட, சத்தம்கேட்டு ஒடி வந்த பணியாளர்கள் தாக்கிய இருவரையும் சுற்றி வளைத்து போலீசில் ஒப்படைத்துள்ளார்கள். மேலும், வருண்மணியனையும் உடனடி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பிடிபட்ட இருவரும் சைதாப்பேட்டையைச் சேர்ந்த முத்துக்குமார், பாலமுருகன் என்பது தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தாக்குதலுக்கான காரணம் என்னவென்பது விசாரணைக்கு பிறகு தெரியவரும் என்கிறார்கள்.