இந்தியா தொடர்ந்து அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரியை விதிப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் டிவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனாவுடனான வர்த்தகப் போர், இரான் மீதான பொருளாதாரத்தடை, வெளிநாட்டவர்க்கு வழங்கப்படும் விசாக்கள் குறைப்பு, அகதிகளைக் கட்டாயமாக அமெரிக்காவில் இருந்து வெளியேற்றுதல் போன்ற மோசமான செயல்களை தனது ஆட்சிக்காலத்தில் செய்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிகவரியினை விதித்துள்ளார். இதில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் அலுமினியம் உள்ளிட்ட பொருட்களின் வரியையும் தாறுமாறாக ஏற்றியுள்ளார். அதற்குப் பதிலடி தரும் விதமாக இந்திய அரசும் 29 அமெரிக்கப் பொருட்களுக்குக் கூடுதல் வரி விதித்துள்ளது.

இது சம்மந்தமாக பேசுவதற்காக இந்தியா வந்துள்ள அமெரிக்க அரசு செயலாளர் மைக் பாம்போ நேற்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். இந்த பேச்சுவார்த்தைக்கு அடுத்து இரு நாட்டுக்கும் இடையில் சுமூக உறவு ஏற்படும் என எதிர்பார்த்த நிலையில் இன்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ‘அமெரிக்கா மீது தொடர்ந்து அதிக வரிகளை இந்திய அரசு விதித்து வருகிறது. இது சம்மந்தமாக பிரதமர் மோடியை சந்தித்து பேச விரும்புகிறேன். ’ என மிரட்டும் தொனியில் கூறியுள்ளார். இந்தியப் பொருட்களின் மீது முதலில் வரியை ஏற்றுவிட்டு இந்தியாவைக் குற்றம் சொல்லியுள்ள ட்ரம்ப்பின் செயல் இந்தியர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.