கடந்த 2004-ஆம் ஆண்டு தமிழகத்தை சுனாமி தாக்கும் வரை சுனாமி என்ற பெயரையே நான் கேட்டதில்லை. தற்போது சுனாமி எச்சரிக்கை என்றால் கடலோர மக்கள் நடுங்கும் அளவுக்கு அது கோர தாண்டவம் ஆடியுள்ளது. உடன் இருந்தவர்களையும், உடமைகளை இழந்த அவர்களுக்கு சுனாமி என்றுமே மாறாதா சோக வடு.

இந்நிலையில் காலநிலை மாற்றத்தால் கடல்நீர் மட்டம் உயர்வடைந்து வருவதாகவும், இதனால் உலகம் முழுவதையும் சுனாமி தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த நிபுணர்கள் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவிலுள்ள வர்ஜீனியா தொழில்நுட்ப நிறுவனத்தின் உதவிப் பேராசிரியர் ராபர்ட் வெயிஸ் தலைமையிலான நிபுணர்கள் குழு, காலநிலை மாற்றத்தால் கடல்நீர் மட்டம் உயர்ந்து வருவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு கட்டுரை ஒன்றை வெளியிட்டது. அந்த கட்டுரை அறிவியல் இதழில் வெளியிடப்பட்டது.

அதில், தற்போது காலநிலை மாற்றத்தால் கடல்நீர் மட்டம் கொஞ்சம் உயர்ந்துள்ளது. தெற்கு சீனாவிலுள்ள மகாவ் கடலில் 1.5 அடி முதல் 3 அடி வரை கடல்நீர் மட்டம் உயர்ந்துள்ளது. அதிக அளவில் மக்கள் வாழும் சீனாவில் இதனால் 8.8 ரிக்டரில் அளவில் நிலநடுக்கம் ஏற்பட அபாயம் உள்ளது. இதனால் சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளது என அந்த கட்டுரை தெரிவிக்கிறது.

மேலும், தெற்கு சீனக்கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து தொடங்கி, தெற்கு தைவான் வழியாக உலகம் முழுவதையும் சுனாமி தாக்கும் அபாயம் உள்ளது என்று தங்கள் ஆய்வில் தெரியவந்துள்ளதாக நிபுணர்கள் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.