அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிகழ்ச்சி ஒன்றில் ஜெயலலிதா கொள்ளையடித்த பணம் என பேசியது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கருத்து கூறிய அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தை சேர்ந்த டிடிவி தினகரன் அமைச்சர்கள் கோமாளித்தனமாக பேசுவதாக கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார் தினகரன். அப்போது, அமைச்சர்கள் கோமாளித்தனமாகப் பேசுவதைப் பார்த்தால், அவர்கள் சிகிச்சை எடுக்க வேண்டும் என்று தோன்றுவதாகக் கடந்த பிப்ரவரி மாதம் ஊடகத்திடம் தெரித்திருந்தேன். உடனடியாக, என் மீது அவதூறு வழக்கை முதல்வர் போட்டார்.

கம்ப ராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் என்று முதல்வரே பேசினால், நம்மைப்பற்றி மற்ற மாநிலத்தவர்கள் மற்றும் நமது மாணவர்கள் என்ன நினைப்பார்கள். இன்னொரு அமைச்சர், டெல்லியில் இருந்துவந்த ஏ.சி. பேருந்தால் டெங்கு பரவியதாகத் தெரிவித்தார். தமிழக முதல்வராக அன்னை இந்திரா காந்தி இருந்தபோது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியிருக்கிறார்.

திண்டுக்கல் சீனிவாசன் சுதா ரகுநாதன் என்று சொல்வதற்கே அவ்வளவு கஷ்டப்பட்டவர். அவரைப் பலமுறை எம்பியாக்கியது ஜெயலலிதா. சேடப்பட்டி முத்தையாவால் அமைச்சராகத் தொடர முடியாதபோது அவரை அமைச்சர் ஆக்கியதும் ஜெயலலிதாதான். தற்போது அதற்கெல்லாம் திண்டுக்கல் சீனிவாசன் நன்றிக்கடன் செலுத்துகிறார். இவர்கள் எவ்வளவு யோக்கியர்கள் என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது. அம்மாவுடைய ஆட்சி என்று சொல்லிக்கொண்டு தாயைப் பழிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளனர் என டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.