துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாஜகவின் ஏஜெண்ட் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக ஜெயலலிதா மாவட்ட பேரவை அலுவலக திறப்பு விழாவில் கலந்துகொள்ள வந்த டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், அதிமுக வெற்றிக்காக தனது துணை முதல்வர் பதவியில் இருந்தும் விலக தயார் என ஓபிஎஸ் கூறியிருப்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த தினகரன், ஜெயலலிதா இறந்த பின்னர் அவரது நினைவிடத்தில் தொடங்கியது இந்த தர்ம யுத்தம் நாடகம். இந்த ஆட்சி ஊழல் ஆட்சி என்று சொல்லிவிட்டு, இந்த ஆட்சி இருக்கக்கூடாது என்று எதிர்த்து வாக்களித்தவர் ஓபிஎஸ். இந்த ஆட்சி ஊழல் ஆட்சி என்று சொல்லிவிட்டு ஒரு மாதம் கழித்து துணை முதல்வர் பதவியை ஏற்றவர்.

தமிழ்நாட்டு மக்களுக்கு இவருடைய சுயரூபம் மொத்தமாக தெரிந்துவிட்டதால் நான் பதவியை ராஜினாமா பண்றேன், எனக்கு கட்சிதான் முக்கியம் என்று சொல்லிவிட்டு பாஜகவோட ஏஜெண்டா இங்க செயல்பட்டது எல்லோருக்கும் தெரியும். பிரதமர் சொல்லித்தான் துணை முதல்வர் பதவியையே ஏற்றுக்கொண்டேன்னு அவரே சொன்னார். என்கிட்டே சொல்லிட்டு, என் ஆலோசனையை கேட்டுவிட்டுப் போய்தான் தர்மயுத்தம் நடத்தினாருன்னு குருமூர்த்தி சொல்கிறார். அதனால் பன்னீர்செல்வம் சொல்வதையெல்லாம் பெரிதாக எடுத்துக்க வேண்டாம். நீர் மேல எழுதப்பட்ட எழுத்து, அவ்வளவுதான் என கடுமையாக விளாசித்தள்ளினார் டிடிவி தினகரன்.