அதிமுக அலுவலகத்தில் சற்று முன்னர் தொடங்கிய பொதுக்குழு கூட்டத்துக்கு இரண்டு முக்கியமான அமைச்சர்கள் கலந்து கொள்ளாதது சலசலப்புகளை உருவாக்கியுள்ளது.

அதிமுகவுக்கு ஒற்றைத்தலைமை வேண்டும் என்ற ராஜன் செல்லப்பா கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பேசியது அக்கட்சிக்குள் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ராஜன் செல்லப்பா, ஓபிஎஸ் சொல்லிதான் அப்படி பேசுகிறார் என்று பலரும் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இதனையடுத்து  அதிமுகவுக்குள் எழுந்துள்ள சலசலப்புகளை தீர்க்க சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் எம்.பிக்கள், எம்.எல்.ஏ.க்கள், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள்,கலந்து கொள்வார்கள் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் காலையில் அதிமுக அலுவலகத்துக்கு எதிராக ’பொதுச்செயலாளராக பதவியேற்க வாருங்கள் எடப்பாடியாரே ’ என எடப்பாடி பழனிச்சாமிக்கு போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டது ஒபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  அதுமட்டுமல்லாமல் சற்று முன்னர் தொடங்கிய இந்த கூட்டத்தில் கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகிய இரண்டுபேரும் பங்கேற்காததால் அதிமுக அலுவலகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.