கடந்த சில மாதங்களாக திமுகவில் மு.க.ஸ்டாலினுடைய மகன் உதயநிதி ஸ்டாலின் முன்னிலைப்படுத்தப்படுகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தொண்டர் ஒருவர் டுவிட்டரில் எழுப்பிய கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் உடனடியாக பதில் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக திமுக நடத்தும் போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகளில் கருணாநிதியின் பேரனும், மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் அதிகமாக தென்படுகிறார். அவருக்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கப்படுவது போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 4-ஆம் தேதி தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகர், ராமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின் ஆகியோரது படங்களுடன் உதயநிதியின் படமும் இடம்பெற்றிருந்த பேனர் வைக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து இந்த புகைப்படத்தை சாமுராய் என்பவர் டுவிட்டரில் பகிர்ந்து அதில் உதயநிதி ஸ்டாலினின் டுவிட்டர் கணக்கையும் டேக் செய்து, ஒரு திமுக தொண்டனாய் இதெல்லாம் எவ்வளவு அருவருப்பா இருக்கு தெரியுமா? உங்களுக்கு தோணலையா? முன்னணி தலைவர்கள் மேடைல உங்க போட்டோ இடம்பெற உங்கள் தகுதி என்ன? என்றெல்லாம் அதில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த டுவிட்டர் பதிவுக்கு உடனடியாக பதில் தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், தவறு! மீண்டும் நடக்காது! என்றார்.