அல்வா வாசுவிற்கு அஞ்சலி செலுத்தக்கூட செல்லாத வடிவேலு….

உடல் நலக்குறைவால் சமீபத்தில் மரணமடைந்த நடிகர் அல்வா வாசுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சொற்ப சினிமாக்காரர்களே சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் மணிவண்ணனிடம் உதவியாளராக தமிழ் சினிமாவில் நுழைந்தவர் நடிகர் அல்வா வாசு. அதன் பின் மணிவண்ணன் இயக்கிய படங்கள், குறிப்பாக சத்தியராஜ், வடிவேலு நடித்த பல படங்களில் அல்வா வாசு நடித்துள்ளார். இதுவரை 900க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது.
அந்நிலையில், கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த 6 மாதங்களாக சிகிச்சை பெற்றுவந்த அவர் கடந்த 17ம் தேதி மரணமடைந்தார்.  இதில் என்ன துயரம் என்னவெனில், அவருடன் இணைந்து நடித்த பல காமெடி நடிகர்கள் மற்றும் பெரிய நடிகர்கள் எவரும் அவருக்கு அஞ்சலி செலுத்த செல்லவில்லையாம்.
நடிகர் சங்கம் சார்பில் நடிகர் விக்னேஷ் மட்டும் சென்றிருக்கிறார். அது போக, விரல் விட்டு எண்ணக்கூடிய சில சிறு நடிகர்கள் மட்டுமே அவரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். இது அல்வா வாசுவின் குடும்பத்தினருக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாம்.  

முக்கியமாக, நடிகர் வடிவேலு நடித்த பல படங்களில் அவருடன் இணைந்து அல்வா வாசு நடித்துள்ளார். அந்தக் காமெடிகள் அனைத்துமே ரசிகர்களிடம் பலத்த வரவேற்பு பெற்றவை. இத்தனைக்கும் வடிவேலு, வாசுவின் சொந்த ஊரான மதுரையை சேர்ந்தவர். ஆனாலும், அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தக் கூட வடிவேலு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.