விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை படத்தை பார்த்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விஜய் சேதுபதி மற்றும் அப்படத்தின் இயக்குனர் சீனுராமசாமி ஆகிய இருவரையும் பாராட்டி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:

இயக்குநர் சீனு ராமசாமியின் ‘தென்மேற்குப் பருவக்காற்று’, கள்ளிக் காட்டுச் சீமையின் வாழ்க்கையை ஒரு தாயின் உழைப்பைப் பற்றிப் பேசிய நேர்த்தியான படைப்பு. இந்தப் படத்தில் வரும் கிராமிய வாழ்க்கையைப் பார்த்து என் இளமை நாட்கள் எனக்கு நினைவுக்கு வந்தன. ‘நீர்ப்பறவை’. கடற்கரை ஓர மீனவர் வாழ்க்கையை, ‘படகோட்டியிலும்’, ‘கடலோரக் கவிதைகளிலும்’ நான் கண்டிருந்தாலும், ‘நீர்ப்பறவை’ ஆஸ்கர் விருதுபெற வேண்டிய படம் ஆகும்.

‘நீர்ப்பறவை’ உயிர்க் காவியத்தை நான் பார்த்தபோது, ஐந்து இடங்களில் கண் கலங்கி அழுதேன். மொழி அறியாதவர்கள்கூட இந்தப் படத்தைப் பார்த்தால், பிற நாட்டினர் கண்டால் அவர்கள் நெஞ்சத்தை உலுக்கும். தென்கொரிய மக்கள் இப்படத்தைப் பார்த்துவிட்டுக் கண் கலங்கினார்களாம்! இந்தக் காவியத்தைத் தந்தவன் ஒரு தமிழன் என்பதால்தானோ இதற்குத் தேசிய விருது கிடைக்கவில்லை போலும்.

பாச மலரைப் போல், ஞான ஒளியைப் போல், நெஞ்சில் ஓர் ஆலயத்தைப் போல், தொடங்கிய நிமிடத்தில் இருந்து முடியும் வரை என்னை முழுமையாக உலுக்கிய படம் ‘தர்மதுரை’ எனும் வெள்ளித்திரை உயிர் ஓவியம் ஆகும். நடிகர் திலகத்திற்குப் பின்னர், திரைப்படத்தைப் பார்க்கும்போதே கதாபாத்திரம் என் இருதயத்திற்குள் ஊடுருவி அசைத்த நடிகர் என்றால் அவர் விஜய் சேதுபதிதான்.

ஒரு காட்சியில் விஜய் சேதுபதி நடிக்கவில்லை. என் நெஞ்சில் பதிந்து விட்டான். என்னை முழுமையாக ஆக்கிரமித்தார். இந்தப் படத்தை இயக்கிய சீனு ராமசாமிக்கு எவ்வளவு உயர்ந்த விருது கொடுத்தாலும் தகும். இதோ, தெற்குச் சீமையில் இருந்து, ஆம், இராஜபாளையத்தில் இருந்து ஒரு உன்னதமான நடிகன் வெள்ளித்திரையில் ஆளுமை செய்கிறான். அவர்தான் சகோதரன் விஜய் சேதுபதி ஆவார். இவரது, பன்முகத்திறமை, பல வெற்றிகளைக் குவிக்கும்.

சீனு ராமசாமிக்கு உலக அளவில் எந்த உயரிய விருது கிடைத்தாலும், அந்த விருதுக்குத்தான் பெருமை’ என அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.