சமூகத்தில் நடக்கும் தவறுகளுக்கு பெரும்பாலும் முதலாளிகள் தான் காரணம் என்று கம்யூனிஸ்ட்கள் கூறுவதுண்டு. ஆனால் அந்த முதலாளிகள் செய்யும் தவறுகளுக்கு உடந்தையாக இருப்பது அவர்களிடம் வேலைக்கு இருக்கும் வேலைக்காரர்கள்தான். அவர்கள் திருந்தினால் ஒட்டுமொத்த சமுதாயமும் திருந்தும் என்ற உண்மையை உறைக்க வைக்கும் படம் தான் வேலைக்காரன்

அப்பாவி இளைஞர்களை அடிமையாக்கி கூலிப்படை நடத்தி வரும் பிரகாஷ்ராஜூக்கும், அப்பாவி மக்களின் உயிர்களை பறிக்கும் உணவுப்பொருட்களை விற்பனை செய்யும் மார்க்கெட்டிங் அதிகாரிக்கும் பெரிய வேறுபாடு இல்லை என்றும், கூலிப்படையினர் கூலி வாங்கி கொண்டு செய்யும் கொலைகளை மார்க்கெட்டிங் அதிகாரிகள் சம்பளம் வாங்கிக்கொண்டு செய்வதையும் புரிந்து கொள்ளும் சிவகார்த்திகேயன், வேலைக்காரர்களின் மனதை மாற்ற எடுக்கும் முயற்சிகள் தான் இந்த படத்தின் கதை

வழக்கமான காமெடி கலந்த ஹீரோ சிவகார்த்திகேயனை இந்த படத்தில் பார்க்க முடியாது. படம் முழுவதும் சீரியஸ் கேரக்டரில் வரும் சிவகார்த்திகேயன் அதற்கு தகுந்தபடி மாறிக்கொள்ள எடுத்திருக்கும் உழைப்பும், முயற்சியும் பாராட்டுதலுக்கு உரியது

நயன்தாரா ஒருசில காட்சிகளே வந்தாலும் மனதில் நிற்கும் கேரக்டரில் நடித்துள்ளார்

தனி ஒருவன் அரவிந்தசாமியை ஞாபகப்படுத்தும் மிக அழுத்தமான கேரக்டர் பகத் பாசிலுக்கு. அவரும் தனது சுமையை உணர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஈடுகொடுக்கும் வகையில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ், சார்லி, தம்பி ராமையா, மன்சூரலிகான், ரோஹினி, ஆர்.ஜே பாலாஜி, விஜய் வசந்த் ஆகிய அனைவரும் மனதில் நிற்கின்றனர்.

படத்தின் மிகப்பெரிய பலம் கூர்மையான வசனங்கள். படம் முழுவதும் சமூக கருத்துக்களை கூறும் ஆணித்தரமான வசனங்கள். இரண்டாவது பாதியில் படத்தின் நீளமும், ஒருசில லாஜிக் மீறல்களும் மட்டுமே சிறு குறைகளாக தெரிகிறது.

மொத்தத்தில் வேலைக்காரன், அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு சமூக பொருப்புள்ள படம்

4.0/5