‘ரெமோ’ படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘வேலைக்காரன்’. இப்படத்தை மோகன் ராஜா இயக்குகிறார். நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். மலையாள நடிகர் பஹத் பாசில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார்.

இப்படத்தை முதலில் விநாயகர் சதுர்த்திக்கு வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருந்தனர். ஆனால், படப்பிடிப்பு வேலைகள் கொஞ்சம் காலதாமதம் ஆனதைத் தொடர்ந்து ஆயுதபூஜைக்கு வெளியிடப்போவதாக அறிவித்தனர். ஆனால், இன்னமும் வேலைக்காரன் படத்தின் வேலைகள் இன்னும் முடிவடையாத நிலையில், இப்படத்தின் ரிலீஸை டிசம்பர் 22-ந் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர் படக்குழுவினர்.

இப்படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருவதால் ஏதாவது பண்டிகை காலங்களில் வெளியிட்டால் சரியாக இருக்கும் என்பதை மனதில் வைத்துக் கொண்டே கிருஸ்துமஸ் தினத்தில் வெளியிட முடிவு செய்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது இப்படத்தின் சென்சார் பணிகள் போய்க் கொண்டிருப்பதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.