‘கபாலி’ பட பாணியில் சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு மலேசியாவில் நடந்தது என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் தற்போது தயாராகி வரும் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘வேலைக்காரன்’ திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பும் மலேசியாவில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

குறிப்பாக ‘கபாலி’ படமாக்கப்பட்ட லொகேஷன்களில் இந்த படத்தை படமாக்க மோகன்ராஜா முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி மலேசியாவில் உள்ள பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் இதற்கான அனுமதியை ஏற்கனவே படக்குழுவினர் பெற்றுவிட்டதாக கூறப்படுகிறது.

‘வேலைக்காரன்’ படத்தின் படப்பிடிப்பு இதுவரை சென்னையில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் பிரமாண்டமாக போடப்பட்ட சேரி செட்டில் படமாக்கப்பட்டது. இந்த படம் ஒரு சேரியில் உள்ள ஒரு முக்கிய சமூக பிரச்சனை சம்பந்தப்பட்ட கதை என்பது குறிப்பிடத்தக்கது

சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில், சினேகா, பிரகாஷ்ராஜ், ரோகினி, ஆர் ஜே பாலாஜி, சதீஷ், ரோபோ ஷங்கர் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு இளம் இசைப்புயல் அனிருத் இசையமைத்து வருகிறார். ராம்ஜி ஒளிப்பதிவில், விவேக் ஹர்சன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.