Home சற்றுமுன் 11-ம் வகுப்பு மாணவன் தற்கொலை: ஆசிரியரே காரணம் என கடிதம்!

11-ம் வகுப்பு மாணவன் தற்கொலை: ஆசிரியரே காரணம் என கடிதம்!

வேலூர் மாவட்டத்தில் 11-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவன் ஒருவன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதற்கு தனது ஆசிரியர்களே காரணம் என அவன் கடிதம் எழுதி வைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் அருகே பொய்கை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அருண்பிரசாத் என்ற மாணவன் 11-ஆம் வகுப்பு படித்து வந்தான். இந்த மாணவன் கடந்த திங்கள் கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளான். இதுகுறித்து சக மாணவர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் தற்கொலை செய்துகொண்ட மாணவனின் புத்தகப்பையின் நடுவில் இருந்து கடிதம் ஒன்றை எடுத்துள்ளனர்.

அந்த கடிதத்தில், தான்னுடைய தற்கொலைக்கு ஆசிரியர்கள் ரவிச்சந்திரன், கண்ணப்பன், உயிரியல் ஆசிரியர் குமார் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் தான் காரணம் என எழுதியுள்ளார். உயிரியல் ஆசிரியர் தனது சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாகவும், பாடம் நடத்தாமல் கேள்வி கேட்டு அடித்ததாகவும் அந்த கடிதத்தில் அருண் பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்மந்தப்பட்ட பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியர் கண்ணப்பணை சரமாரியாக தாக்கினர். மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இறந்து போன மாணவர் நன்றாக படிக்கும் மாணவர் என சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.