Vijay 63 : ‘தெறி, மெர்சல்’ படங்களுக்கு பிறகு மீண்டும் ‘தளபதி’ விஜய் – இயக்குநர் அட்லி கூட்டணியில் உருவாகும் படத்தை ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கிறது. இது விஜய்யின் கேரியரில் 63-வது படமாம். இதில் விஜய்-க்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிக்கிறார். மேலும், கதிர், இந்துஜா, ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், விவேக், யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர்.

இதற்கு ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படத்தை இந்த ஆண்டு (2019) தீபாவளிக்கு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். சமீபத்தில், இந்த படத்தின் கதை என்னுடையது என்று குறும்பட இயக்குநர் கே.பி.செல்வா தென்னிந்திய எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்தார். இதற்கு எழுத்தாளர் சங்கம் “நீங்கள் கடந்த 20.09.2018 அன்றுதான் எங்கள் சங்கத்தில் தற்காலிக உறுப்பினராக சேர்ந்திருக்கிறீர்கள்.

எங்களது சங்க விதிமுறைகளின்படி உறுப்பினராக பதிவு செய்து கொண்ட ஒருவர், உறுப்பினர் ஆன தேதியிலிருந்து ஆறு மாத காலத்திற்கு பிறகே கதை புகார் அளிக்க வேண்டும் என்கிற விதி இருப்பதால் 18.01.2019-யில் கொடுத்த உங்கள் புகாரை ஏற்றுக் கொள்ள இயலவில்லை” என்று தெரிவித்தது. தற்போது, கே.பி.செல்வா நீதிமன்றத்தை நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாம். மேலும், இவ்வழக்கு ஏப்ரல் 23-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.