இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி தெலுங்கு கற்றுக்கொள்ளும் முடிவெடுத்துள்ளார்.

விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் திரைப்படம் ‘பிச்சாகாடு’ என்ற தலைப்பில் தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஆந்திராவில் வெளியாகி வசூலை அள்ளியது. அதேபோல், அவர் நடித்த சைத்தான் மற்றும் எமன் ஆகிய படங்களும் தெலுங்கில் வெளியானது.

எனவே, தனது அடுத்தடுத்த படத்தையும் தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிட விஜய் ஆண்டனி முடிவெடுத்துள்ளார். மேலும் தமிழில், தான் நடித்து வரும் தமிழ் படங்களில் ஆந்திராவிற்கு ஏற்றவாறு சில மசாலாக்களையும் கலந்து கொடுக்க இயக்குனர்களிடம் அவர் ஆலோசனை செய்து வருகிறாரம். சில தெலுங்கு பட இயக்குனர்களும், விஜய் ஆண்டனியிடம் கதை சொல்லி வருகிறார்களாம்.

எனவே, ஒரு ஆசிரியரை நியமித்து தெலுங்கு கற்று வருகிறாராம் விஜய் ஆண்டனி. இயக்குனர் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் அவர் அடுத்து நடிக்கவுள்ள ‘அண்ணாதுரை’ படமும் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகும் எனத் தெரிகிறது.