சசிகுமார் உறவினர் அசோக்குமார் தற்கொலை காரணமாக ஒருபக்கம் ஒட்டுமொத்த திரையுலகமே அன்புச்செழியனுக்கு எதிராக குரல் கொடுத்து வரும்போது இன்று காலை இயக்குனர் சீனுராமசாமி அவரை உத்தமர் என்று கூறி ஆதரவாக குரல் கொடுத்தார். இதனையடுத்து தற்போது நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியும் அன்புச்செழியனுக்கு ஆதரவு கொடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

நடிகர் சசிகுமார் அவர்கள் மிகவும் சிறந்த இயக்குனர் மற்றும் நல்ல மனிதர். அவரது உறவினர் அசோக்குமார் அவர்களின் தற்கொலையை நினைத்து நான் மிகவும் மனவேதனைப்படுகிறேன். அசோக்குமார் அவர்கள் தனது மனைவி, பெற்றோர் மற்றும் குழந்தைகளை தவிக்கவிட்டுவிட்டு தற்கொலை முடிவை தவிர்த்திருக்க வேண்டும்

’நான் கடந்த 6 வருட காலமாக, தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர் அன்புச் செழியனிடம் பணம் வாங்கித்தான் படம் எடுத்து வருகிறேன். அதை, முறையாகத் திரும்ப செலுத்தியும் வருகிறேன். இதுநாள் வரை அன்புச் செழியன் என்னிடம் சரியான முறையில்தான் நடந்து வருகிறார். அனைவரும் அவரை சற்று மிகைப்படுத்தி சித்திரிப்பதாகத் தோன்றுகிறது’

திரைப்படத்துறையில் 99% தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் கடன் வாங்கி படம் எடுத்துதான் இந்நாள் வரையில் முன்னேறி இருக்கிறார்கள். திரு அசோக்குமார் அவர்களின் மரணம் தற்கொலையின்ன் கடைசி மரணமாக இருக்க வேண்டும். நான் தற்கொலைக்கு எதிரானவன். ஏனென்றால் தற்கொலை செய்து கொண்ட என் தந்தையால் நானும் என் தாய் மற்றும் என் குடும்பம் அனுபவித்த கஷ்டம் எனக்கு நன்றாக தெரியும். ‘எனக்கும் கடன் இருக்கிறது, உழைத்துக்கொண்டிருக்கிறேன்.

இவ்வாறு விஜய் ஆண்டனி தனது அறிக்கையில் கூறியுள்ளார்