தமிழ் சினிமாவுக்கு இசையமைப்பாளராக அறிமுகமாகி, தற்போது நடிகராக வலம் வந்துகொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவருடைய நடிப்பில் வெளிவந்துள்ள பெரும்பாலான படங்கள் வெற்றிநடை போட்டு வரும் நிலையில், வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதேபோல், தன்னுடைய படத்திற்கான தலைப்பையும் வித்தியாசமாகவே தேர்வு செய்து வருகிறார்.

அந்த வரிசையில் தற்போது மறைந்த முன்னாள் முதல்வர் ‘அண்ணாதுரை’ பெயரில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்தில் தான் விஜய் ஆண்டனி குடிகாரனாக நடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும், ஆசிரியராகவும் இப்படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் மொத்தம் இரண்டு வேடங்களில் விஜய் ஆண்டனி நடிப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தை புதுமுக இயக்குனர் ஜி.சீனிவாசன் இயக்கி வருகிறார். விஜய் ஆண்டனி இசையமைப்பதோடு இப்படத்திற்கான எடிட்டிங் பணியையும் அவரே மேற்கொள்ளவிருக்கிறார். இதன்மூலம் தமிழ் சினிமாவில் எடிட்டராகவும் வலம்வர உள்ளார். ராதிகா சரத்குமார், பாத்திமா விஜய் ஆண்டனி இருவரும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தை தொடர்ந்து கிருத்திகா உதயநிதி இயக்கும் காளி என்ற படத்திலும் விஜய் ஆண்டனி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.