கோலிவுட் திரையுலகில் வேலைநிறுத்தம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கியுள்ளன. அந்த வகையில் பிரபல இயக்குனர் ஏ.ஆர்.,முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘தளபதி 62’ படத்தின் படப்பிடிப்பும் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த படப்பிட்ப்பில் விஜய் மற்றும் சுமார் 100 கல்லூரி மாணவர்கள் சென்னையை சுற்றி மோட்டார் சைக்கிளில் வலம் வருவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த படப்பிடிப்பை வேடிக்கை பார்த்த ஒரு விஜய் ரசிகர் படப்பிடிப்பு காட்சிகளை தனது மொபைல் போன் மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார். இதனால் ‘தளபதி 62” படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையில் புகார் செய்யவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
விஜய், கீர்த்தி சுரேஷ், யோகிபாபு உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இந்த படம் வரும் தீபாவளி திருநாளில் திரைக்கு வருகிறது.