இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1999-ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றிநடை போட்ட படம் ‘முதல்வன்’. இப்படத்தில் அர்ஜுன், ரகுவரன், மனிஷா கொய்ராலா, மணிவண்ணன், விவேக் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். முதலில் இப்படத்தில் நடிக்க ரஜினியைத்தான் ஒப்பந்தம் செய்வதாக இருந்தனர். இது ஒரு அரசியல் படம் என்பதால், அப்போதைய அரசியலை கருத்தில் கொண்டு, இப்படத்தில் நடித்தால் ரசிகர்கள் தன்னை அரசியலுக்கு வருவதற்கு வற்புறுத்துவார்கள் என்பதை காரணம் காட்டி இப்படத்தில் நடிக்க ரஜினி மறுத்துவிட்டார். அதன்பிறகு அர்ஜுன் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இரண்டாம் பாகத்திற்கான கதையை ‘பாகுபலி’ படத்தின் இயக்குனர் ராஜமௌலியின் அப்பா விஜயேந்திர பிரசாத் எழுதி வருவதாகவும் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட கதை எழுதி முடித்துவிட்ட நிலையில், ஷங்கரின் ஒப்புதலுக்காக விஜயேந்திர பிரசாத் காத்திருக்கிறாராம்.

இந்நிலையில், இரண்டாம் பாகத்தில் யாரை நடிக்க வைக்கலாம்? என்பது குறித்தும் ஒருபக்கம் பேச்சு அடிபட்டு வருகிறது.  முந்தைய பாகத்தில் நடிக்க மறுத்த ரஜினி தற்போது அரசியலில் தீவிரம் காட்டி வருவதால், அவரையே நடிக்க வைக்கலாமா? என்ற எண்ணம் ஒருபுறம் ஓடிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

மறுபுறம், அரசியலில் களமிறங்க துடிக்கும் விஜய்யை இப்படத்தில் நடிக்க வைக்கலாமா? என்ற பேச்சும் ஓடிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. விஜய்யும் சமீபகாலமாக சமுதாயத்தில் நடக்கும் அவலங்களை சுட்டிக்காட்டும் படங்களில் நடிப்பதை வழக்கமாக கொண்டு வருகிறார். அந்த வரிசையில் இந்த படமும் சமூக அக்கறை கொண்ட படமாக இருககும் என்பதால் அவர் இந்த படத்தில் நடிக்க நிச்சயம் ஒப்புக் கொள்வார் என்று கோலிவுட் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருக்கலாம். விஜய் தற்போது ‘மெர்சல்’ படத்தில் நடித்து வருகிறார். அட்லி இயக்கும் இப்படத்திற்கு விஜயேந்திர பிரசாத் திரைக்கதை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.